கிரிக்கெட் (Cricket)

கேப்டன் பதவி செயல்பாடு: தோனியிடம் இருந்து சுப்மன் கில் கற்றுக்கொள்ள வேண்டும்- கேரி கிறிஸ்டன் அறிவுரை

Published On 2025-07-18 12:27 IST   |   Update On 2025-07-18 12:27:00 IST
  • தோனியை விட வீரர்களை சிறப்பாக கையாளும் கேப்டனை நான் பார்த்தது கிடையாது.
  • அவரிடம் இருந்து சுப்மன் கில் பெற்றுக்கொள்ளும் அறிவுரைகள் அவரது கேப்டன் பதவி செயல்பாட்டை நிச்சயம் மேம்படுத்தும்.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது டெஸ்டில் இந்தியா வென்றது. இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் வருகிற 23-ந்தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.

இந்த தொடருக்கு முன்பாக ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கேப்டன் பதவி செயல்பாடு குறித்து டோனியிடம் இருந்து சுப்மன் கில் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் அறிவுரை வழங்கி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

சுப்மன் கில் தற்போதுதான் கேப்டன் பதவியில் தனது ஆரம்ப கட்டத்தில் இருக்கிறார். அவரிடம் சிறப்பான கேப்டனாக மாறுவதற்கான அனைத்து தகுதிகளும் இருக்கிறது. அவர் போட்டி குறித்து நன்கு சிந்திக்க கூடியவராக இருக்கிறார்.

மேலும் அவர் ஒரு நல்ல பேட்ஸ்மேன் என்பதால் நிச்சயம் அடுத்தடுத்த தொடர்களில் அவர் கேப்டன் ஷிப் குறித்தும் படிப்படியாக கற்றுக்கொள்வார்.

ஒரு கேப்டன் தனது அணியில் உள்ள வீரர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை முற்றிலுமாக புரிந்து கொண்டவராக இருக்க வேண்டும். முன்னாள் கேப்டனான தோனி ஒரு அணியை எவ்வாறு கையாள வேண்டும், வீரர்களிடம் இருந்து திறனை எவ்வாறு வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதை முழுமையாக தெரிந்து வைத்திருப்பவர்.

எனவே டோனியிடம் இருந்து அறிவுரைகளை சுப்மன் கில் கேட்டுப் பெறவேண்டும். தோனியை விட வீரர்களை சிறப்பாக கையாளும் கேப்டனை நான் பார்த்தது கிடையாது. எனவே அவரிடம் இருந்து சுப்மன் கில் பெற்றுக் கொள்ளும் அறிவுரைகள் அவரது கேப்டன் பதவி செயல்பாட்டை நிச்சயம் மேம்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News