நான் கேப்டனாக இருக்கும்போது பென் ஸ்டோக்ஸ் எனது பேச்சை கேட்கவில்லை: ஜோ ரூட்
- பென் ஸ்டோக்ஸ் லார்ட்ஸ் மைதானத்தில் 44 ஓவர்கள் வீசினார்.
- 5 விக்கெட் வீழ்த்தியதுடன், ரிஷப் பண்ட்-ஐ ரன்அவுட் ஆக்கினார்.
நான் கேப்டனாக இருக்கும்போது பென் ஸ்டோக்ஸ் எனது பேச்சை கேட்கவில்லை என இங்கிலாந்தின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டனாக இருக்கும் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. தனது உடல்நிலை ஒத்துழைக்காததால் டெஸ்டில் மட்டும் விளையாடி வருகிறார். அடிக்கடி காயம் ஏற்படுவதால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் கடின முயற்சியால் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்வார். பெரிய அளவில் பந்து வீசமாட்டா். ஆனால் இந்தியாவுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இரண்டு இன்னிங்சில் சேர்த்து 44 ஓவர்கள் வீசினார். முதல் இன்னிங்சில் 2 விக்கெட், 2ஆவது இன்னிங்சில் 3 விக்கெட் என 5 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார். ஒரே ஸ்பெல்லில் 9 ஓவர்களுக்கு மேல் வீசினார்.
இந்த நிலையில் கடந்த ஐந்து வருடத்திற்கு முன்னதாக நான் கேப்டனாக இருக்கும்போது, அதிக ஓவர்கள் வீச வேண்டாம் என கேட்டுக்கொண்ட போதும் பென் ஸ்டோக்ஸ் எனது பேச்சை கேட்கவில்லை என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜோ ரூட் கூறியதாவது:-
நீங்கள் முயற்சி செய்யலாம். ஆனால் இது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் முயற்சி செய்து வருகிறேன். இதை அவரிடம் வலியுறுத்தினேன். ஆனால் அவர் எப்போதும் எனது பேச்சை கேட்கவில்லை. நான் கேப்டனாக இருக்கும்போது, அவர் என்னுடைய பேச்சை கேட்கவில்லை.
இப்போது அவர் செய்தது நம்பமுடியாத முயற்சி. நாங்கள் முன்னோக்கி செல்வதற்கான நல்ல அறிகுறி. ஏனென்றால் அவர் நல்ல நிலைக்கு திரும்பியுள்ளார். அவருக்கு அந்த மனநிலையும், போட்டிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற விருப்பமும் உள்ளது. அவரை எங்கள் கேப்டனாக கொண்டிருப்பது எங்களுக்கு அதிர்ஷ்டம்.
இவ்வாறு ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.