யாரையும் மாற்ற தேவையில்லை: மும்பை இந்தியன்ஸ் ஒரு GUN அணி.. முன்னாள் சிஎஸ்கே வீரர்
- மும்பை இந்தியன்ஸ் அணி எந்த சர்வதேச டி20 அணியையும் வீழ்த்த முடியும்.
- முக்கிய அணி ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு முன்பு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் பட்டியலை பிசிசிஐக்கு ஐபிஎல் அணிகள் வரும் 15-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். இதனால் டிரேட் முறையில் ஐபிஎல் அணிகள் ஏலத்திற்கு முன்பே தங்களது வீரர்களை வேறு அணிக்கு மாற்றிக் கொள்ள ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அப்படி ஏதும் செய்ய தேவையில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மும்பை ஒரு அற்புதமான அணி. அவர்களைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. தீபக் சாஹர் போன்ற ஒருவரை மாற்றுவது பற்றி அவர்கள் யோசிக்கலாம். அதைத் தவிர, அவர்களுக்கு வேறு யாரும் தேவையில்லை.
ரோகித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, டிரென்ட் போல்ட், மிட்செல் சாண்ட்னர் மற்றும் ரியான் ரிக்கல்டன் என சொல்லி கொண்டே போகலாம். ஒரு அணிக்கு வேறு என்ன தேவை. எனவே அவர்களுக்கு இன்னும் இரண்டு முதல் மூன்று வீரர்கள் மட்டுமே தேவை. அது ஒரு துப்பாக்கி அணியாக இருக்கும்.
மும்பை இந்தியன்ஸ் அணி எந்த சர்வதேச டி20 அணியையும் வீழ்த்த முடியும். அவர்கள் எதையும் மாற்ற வேண்டியதில்லை. ஏலத்தில் சில வீரர்களை அவர்கள் எடுக்கலாம். ஆனால் முக்கிய அணி ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
என்று பத்ரிநாத் கூறினார்.