டிராவிஸ் ஹெட் அதிரடி சதம்- ஆஸ்திரேலியா 337 ரன்களுக்கு ஆல் அவுட்
- டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
- இந்திய தரப்பில் பும்ரா, சிராஜ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 44.1 ஓவர்களில் 180 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 86 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது.
நாதன் மெக்ஸ்வீனி 39 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்மித் 2 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து டிராவிஸ் ஹெட், லபுசேன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் விளாசினர். லபுசேன் 64 ரன்னில் நிதிஷ் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 9, அலெக்ஸ் ஹேரி 15, பேட் கம்மின்ஸ் 12 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் சதம் விளாசி அசத்தினார். அவர் 140 ரன்களில் சிராஜ் பந்தில் கிளீன் போல்ட் ஆனார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 337 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 157 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய தரப்பில் பும்ரா, சிராஜ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.