கிரிக்கெட் (Cricket)

பலமுறை தலையில் காயம்... 27 வயதில் ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

Published On 2025-04-08 12:24 IST   |   Update On 2025-04-08 12:24:00 IST

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் வில் பொக்கோஸ்கி, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இளம் வயதிலேயே தொடர்ந்து சதம் சதமாக அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். 36 உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2350 ரன்கள் அடித்திருந்தார். இதில் 7 சதம் அடங்கும். அதுமட்டுமல்லாமல் இவருடைய சராசரி 45 என்ற அளவில் இருந்தது.

    தன்னுடைய திறமை காரணமாக 22-வது வயதில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2020-21-ம் ஆண்டு அறிமுகமானார். சிட்னி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 62, இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன்கள் அடித்தார்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று கணிக்கப்பட்ட நிலையில் பேட்டிங் செய்யும்போது தொடர்ந்து பந்து தலையை தாக்கிக் கொண்டு இருந்தது. இதனால் அவருக்கு பலமுறை காயம் ஏற்பட்டு போட்டியிலிருந்து பாதியில் விலகி இருக்கிறார்.

    ஒரு முறை இரண்டு முறை அல்ல காயம் அடைந்து மீண்டும் குணம் அடைந்து களத்திற்கு வரும்போது மீண்டும் தலையில் பந்து தாக்கி அவர் ஓய்வு பெற்று விடுவார். இப்படியே தொடர்கதையாக இருந்தது. இவருக்கு தொடர்ந்து எப்படி ஒரே இடத்தில் பந்து படுகிறது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.

    இதில் பந்து தலையை தாக்கி விடுமோ என்ற பயத்தில் அவர் விளையாடுவதால் தான் பேட்டிங் யுத்தியை அவர் மறந்து விடுவதாக மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். கடைசியாக ஒரு முறை கிரிக்கெட்டில் சாதித்து விடலாம் என வில் பொக்கோஸ்கி வந்தபோது கடந்தாண்டு மார்ச் மாதம் மீண்டும் தலையில் பந்து அடிபட்டு அவர் காயமடைந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தொடர்ந்து பந்து தலையைத் தாக்கியதால் அது அவருக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதனால் வில் பொக்கோஸ்கி இனி விளையாடவே முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், தன்னுடைய 27 ஆவது வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வில் பொக்கோஸ்கி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    Tags:    

    Similar News