இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்
- தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஹாங்காங்கை சந்திக்கிறது.
- ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இதற்கு முன்பு 4 முறை பங்கேற்றுள்ள ஹாங்காங் ஒன்றில் கூட ஜெயித்ததில்லை.
அபுதாபி:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் நடக்க இருந்த இந்த போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து இரு அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகும்.
2016-ம் ஆண்டில் இருந்து ஆசிய கோப்பை போட்டிக்கான வடிவம், உலக கோப்பை அடிப்படையில் மாற்றப்படுகிறது. அதாவது அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி வருவதால் அதற்கு தயாராகும் வகையில் தற்போது 20 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது. அடுத்த சீசனில் 50 ஓவர் அடிப்படையில் நடைபெறும். இதுவரை 50 ஓவர் வடிவில் 14 முறையும், 20 ஓவர் வடிவில் 2 முறையும் ஆசிய கோப்பை போட்டி நடந்துள்ளது. இதில் இந்தியா 8 முறையும், இலங்கை 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் ஆசிய கோப்பையை வென்றுள்ளன. இந்த தடவையும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேருக்கு நேர் சந்திக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கணிப்புபடி எல்லாம் சரியாக அமைந்தால் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் இந்த ஆசிய கோப்பை போட்டியில் 3 முறை மோத வேண்டி இருக்கும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை நாளை எதிர்கொள்கிறது.
முதல் நாளான இன்றிரவு 8 மணிக்கு அபுதாபியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் ரஷித்கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, யாசிம் முர்தசா தலைமையிலான ஹாங்காங்கை சந்திக்கிறது. சுழல்ஜாலத்தால் வலுவாக காணப்படும் ஆப்கானிஸ்தான், நேற்று முன்தினம் முத்தரப்பு தொடரில் அடைந்த தோல்வியை மறந்து விட்டு புத்துணர்ச்சியுடன் தொடங்கும் ஆவலில் உள்ளது.
அதே சமயம் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இதற்கு முன்பு 4 முறை பங்கேற்றுள்ள ஹாங்காங் ஒன்றில் கூட ஜெயித்ததில்லை. விளையாடியுள்ள 11 ஆட்டங்களிலும் தோற்றுள்ள ஹாங்காங், அந்த மோசமான வரலாற்றை மாற்றிக்காட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ஆப்கானிஸ்தான்: ரஷித்கான் (கேப்டன்), ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், டார்விஷ் ரசூலி, செடிகுல்லா அடல், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், கரிம் ஜனத், முகமது நபி, முஜீப் ரகுமான் அல்லது கசன்பார், நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி.
ஹாங்காங்: யாசிம் முர்தசா (கேப்டன்), அன்ஷூமன் ராத், பாபர் ஹயாத், ஜீஷன் அலி, நிஜாகத் கான், மேத்யூ ஜோட்ஜீ, இசன் கான், அஜாஸ் கான், அதீக் இக்பால், நஸ்ருல்லா ராணா, ஆயுஷ் சுக்லா.
இந்த போட்டி சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.