கிரிக்கெட் (Cricket)

இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு பரிசுமழை

Published On 2025-12-23 11:27 IST   |   Update On 2025-12-23 11:27:00 IST
  • பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் ஊக்கத்தொகையாக தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
  • மொசின் நவ்வி தலா ரூ.16 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்தார்.

கராச்சி:

12-வது இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) துபாயில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் நடந்த இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து 2-வது முறையாக மகுடம் சூடியது. 172 ரன்கள் குவித்த அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சமீர் மின்ஹாஸ் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார்.

இளையோர் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியதும் அந்த வெற்றியை திருவிழா போல் அவர்கள் கொண்டாடினர். நேற்று அதிகாலை தாயகம் திரும்பிய அந்த அணி வீரர்களுக்கு சீனியர் வீரர்களுக்கு கொடுப்பது போன்று தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நேரத்திலும் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று வாழ்த்து கோஷம் எழுப்பினர்.

பாகிஸ்தான் இளம் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் அவர்களுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.1 கோடி (இந்திய மதிப்பில் ரூ.32 லட்சம்) வழங்கப்படும் என்று அறிவித்தார். அத்துடன் அவர்களை தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து விருந்தளிக்க உள்ளார். முன்னதாக அவர்களுக்கு கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், உள்துறை மந்திரியுமான மொசின் நவ்வி தலா ரூ.16 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்தார்.

Tags:    

Similar News