உள்ளூர் போட்டியில் ஆடும் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்
- நடுவர்களுக்கு லீக் ஆட்டங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
- முக்கியமான நாக்-அவுட் சுற்று ஆட்டம் என்றால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில், உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் வீராங்கனைகள் மற்றும் போட்டி நடுவர்களுக்கான கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்படுகிறது. இந்த உயர்வுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது.
உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் பல நாள் போட்டித் தொடரில் விளையாடும் சீனியர் வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. திருத்தப்பட்ட கட்டணத்தின்படி இனி அவர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் பெறுவார்கள். அணிக்கு தேர்வாகி களம் காணாமல் வெளியே இருக்கும் வீராங்கனைகளின் கட்டணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது.
இதே போல் உள்ளூர் 20 ஓவர் போட்டிகளில் களம் காணும் சீனியர் வீராங்கனைகளுக்கு ஒரு போட்டிக்கு ரூ.25 ஆயிரமும், மாற்று வீராங்கனைகளுக்கு ரூ.12,500-ம் அளிக்கப்படுகிறது. ஜூனியர் வீராங்கனைளுக்கும் ஜாக்பாட் அடிக்கிறது. அவர்களுக்கு ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு ரூ.25 ஆயிரமும், 20 ஓவர் போட்டிக்கு ரூ.12,500-ம் வழங்கப்பட உள்ளது.
நடுவர்களுக்கு லீக் ஆட்டங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரமும், அதுவே முக்கியமான நாக்-அவுட் சுற்று ஆட்டம் என்றால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.