null
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் மோதல்
- இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக இருக்கிறது.
- பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டகாரர் சைம் அயூப் மூன்று ஆட்டங்களிலும் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்
துபாய்:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான் (ஏ பிரிவு), இலங்கை, வங்காளதேசம் (பி பிரிவு) ஆகிய அணிகள் தங்கள் பிரிவில் முறையே முதல் இரு இடங்களை பிடித்து 'சூப்பர்4' சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் 'சூப்பர்4' சுற்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்திய அணி லீக் ஆட்டங்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தையும், 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் அடுத்தடுத்து எளிதில் தோற்கடித்தது. ஓமனுக்கு எதிரான கடைசி லீக்கில் 21 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. தோல்வியை சந்திக்காமல் தனது பிரிவில் முதலிடத்தை சொந்தமாக்கி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.
தங்களது வெற்றி உத்வேகத்தை தொடரும் ஆர்வத்துடன் இந்திய அணி உள்ளது. லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 127 ரன்னில் கட்டுப்படுத்திய இந்தியா இலக்கை 15.5 ஓவர்களில் எளிதில் எட்டிப்பிடித்தது. எனவே இந்த ஆட்டத்தில் இந்திய அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும் எனலாம்.
இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக இருக்கிறது. பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் என்று அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லை. பந்து வீச்சில் பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தியும், ஆல்-ரவுண்டர்களாக ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ஷிவம் துபேவும் பலம் சேர்க்கிறார்கள்.
ஓமனுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 15-வது ஓவரில் ஹமாத் மிர்சா அடித்த பந்தை பிடிக்க முயற்சிக்கையில் இந்திய அணியின் சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் காயம் அடைந்த அவர் உடனடியாக வெளியேறினார். அதன் பிறகு அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. அவர் நல்ல நிலையில் இருப்பதாக போட்டிக்கு பிறகு இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி.திலிப் தெரிவித்தார். இந்த தொடரில் இதுவரை 3 விக்கெட் வீழ்த்தி இருக்கும் அக்ஷர் பட்டேல் ஆட முடியாமல் போனால் அணிக்கு இழப்பாகும்.
சல்மான் ஆஹா தலைமையிலான பாகிஸ்தான் அணி 2 வெற்றி (ஓமன், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக), ஒரு தோல்வியுடன் (இந்தியாவுக்கு எதிராக) தனது பிரிவில் 2-வது இடத்தை பெற்று அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.
பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டகாரர் சைம் அயூப் மூன்று ஆட்டங்களிலும் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பேட்டிங்கில் பஹர் ஜமான், விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸ், சகிப்சதா பர்ஹான், பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி ஆகியோர் ஓரளவு பங்களிப்பை வழங்கியுள்ளனர். அந்த அணியின் மிடில் வரிசை தான் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதை சரி செய்ய கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், அப்ரார் அகமது நல்ல நிலையில் உள்ளனர்.
லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும், இந்திய அணியினர், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதை தவிர்த்தனர். முன்னதாக 'டாஸ்' போடும் நிகழ்வின்போது இரு அணியின் கேப்டன்களும் பரஸ்பரம் கைகொடுக்கவில்லை. இந்த சம்பவம் ஆட்டம் முடிந்ததும் சர்ச்சையாக வெடித்தது. டாசின்போது விதிமுறைக்கு மாறாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் கைகுலுக்க வேண்டாம் என்று பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹாவிடம் தகவல் பரிமாறிய போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட் (ஜிம்பாப்வே) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்த புகாரை ஐ.சி.சி. நிராகரித்ததால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் அடுத்து நடந்த அமீகரத்துக்கு எதிரான லீக் ஆட்டத்துக்கு உரிய நேரத்தில் மைதானத்திற்கு வராமல் காலம் தாழ்த்தியதுடன் போட்டியை புறக்கணிக்க போவதாக மிரட்டல் விடுத்தது. அதன் பிறகு போட்டி நடுவர் பைகிராப்ட் தங்களிடம் மன்னிப்பு கேட்டதால் தொடர்ந்து விளையாடப்போவதாக அறிவித்ததுடன் ஒரு மணி நேரம் தாமதமாக களம் இறங்கி ஆடியது.
கைகுலுக்க மறுத்த சர்ச்சை அதைத்தொடர்ந்து அரங்கேறிய புறக்கணிப்பு மிரட்டல் பிரச்சனை ஓய்ந்த சில தினங்களில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்துவதால் இந்த ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் பரம எதிரிக்கு எதிரான தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட இந்திய அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். எனவே இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்தியா 11 ஆட்டங்களிலும், பாகிஸ்தான் 3 ஆட்டங்களிலும் வென்று இருக்கின்றன. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அரங்கேறும் இந்த ஆட்டத்தில் நெருக்கடியை நேர்த்தியாக கையாளும் அணியின் கையே ஓங்கும். ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் சுழலில் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல் அல்லது ஹர்ஷித் ராணாஅல்லது அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
பாகிஸ்தான்: சகிப்சதா பர்ஹான், சைம் அயூப், பஹர் ஜமான், சல்மான் ஆஹா (கேப்டன்), ஹசன் நவாஸ், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், அப்ரார் அகமது.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் 1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.