கிரிக்கெட் (Cricket)

4.3 ஓவரில் இலக்கை எட்டி UAE அணியை நசுக்கியது இந்தியா..!

Published On 2025-09-10 22:00 IST   |   Update On 2025-09-10 22:00:00 IST
  • அபிஷேக் சர்மா 16 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 30 ரன்கள் விளாசினார்.
  • சுப்மன் கில் 9 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சுப்மன் கில் ஆகிய இருவரும் இடம் பிடித்தனர்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 13.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 57 ரன்னில் சுருண்டது. குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தினார். மொத்தமாக 2.1 ஓவரில் 7 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஷிவம் துபே 2 ஓவரில் 4 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

யுஏஇ அணி சார்பில் தொடக்க வீரர்கள் ஷரஃபு (22), கேப்டன் முகமது வாசீம் (19) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர்.

பின்னர் 58 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே சிக்சர் விளாசினார். அடுத்த பந்தில் பவுண்டரி விளாசினார். அடுத்த நான்கு பந்தில் ரன்ஏதும் அடிக்கவில்லை. இதனால் முதல் ஓவரில் இந்தியா 10 ரன்கள் அடித்தது. அடுத்த ஓவரில் சுப்மன் கில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் 15 ரன்கள் அடித்தது.

3ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தன. இதனால் இந்தியா 3 ஓவரில் 38 ரன்கள் சேர்த்தது. 4ஆவது ஓவரின் 4ஆவது பந்தில் சிக்ஸ் அடித்த அபிஷேக் சர்மா, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 16 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 30 ரன்கள் சேர்த்தார்.

2ஆவது விக்கெட்டுக்கு சுப்மன் கில் உடன் சூர்யகமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். சூர்யகுமார் யாதவ் 4ஆவது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கினார். இதனால் இந்தியா 4 ஓவரில் முடிவில் 54 ரன்கள் சேர்த்தது. 5ஆவது ஓவரின் 3வது பந்தை சுப்மன் கில் பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 4.3 ஓவரில் 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சுப்மன் கில் 9 பந்தில் 20 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 2 பந்தில் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Tags:    

Similar News