ஜெய்ஸ்வாலுக்கு நடப்பது அநியாயம்- ஆகாஷ் சோப்ரா ஆதங்கம்
- ஜெய்ஸ்வாலை பொருத்தவரை அவர் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடக்கூடிய தகுதியான ஒரு வீரர்.
- இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுக்கு நடப்பதெல்லாம் ரொம்பவே அநியாயம்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக இடம் பிடித்து விளையாடி வருகின்றனர்.
இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட தகுதியாக இருந்தும் ஒரு சில வீரர்களுக்கு இடம் கிடைக்காமல் போனது பலரது மத்தியிலும் பேசுபொருளானது.
அந்த வகையில் இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் நிச்சயம் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாடியிருக்க வேண்டும் என பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மூன்று வகையான இந்திய அணியிலும் இடம்பெற்று விளையாட தகுதியானவர் ஜெய்ஸ்வால் என அவரை ஆதரித்தும், இந்திய அணியின் நிர்வாகத்தை விமர்சித்தும் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஜெய்ஸ்வாலை பொருத்தவரை அவர் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடக்கூடிய தகுதியான ஒரு வீரர். ஆனால் அவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தற்போது விளையாட வைக்கப்பட்டு வருகிறார். இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுக்கு நடப்பதெல்லாம் ரொம்பவே அநியாயம்.
ஏனெனில் அவரைப் போன்ற ஒரு திறமையான துவக்க வீரர் 3 வடிவ கிரிக்கெட்டிலும் இடம்பிடித்து விளையாட வேண்டிய ஒரு நபர். ஆனால் அவரை ஒரு வடிவத்தில் மட்டுமே இந்திய அணி பயன்படுத்தி வருகிறது. எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் நிச்சயம் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவிப்பார்.
அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியிலும் அவர் இடம் பிடிப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் டி20 போட்டிகளை பொருத்தவரை ஏற்கனவே இந்திய அணிக்குள் பலத்த போட்டி நிலவுவதால் அவருக்கு அணியில் இடம் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியிலும் அவர் விரைவாக தனது வாய்ப்பை எட்டிப்பிடிப்பார்.
என்று ஆகாஷ் சோப்ரா கூறினார்.