விளையாட்டு

சாம்பியன் பட்டம் வென்றார் வைஷாலி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2025-09-16 09:16 IST   |   Update On 2025-09-16 09:16:00 IST
  • வைஷாலி (24) ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று அசத்தியுள்ளார்.
  • கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று அசத்தியுள்ளார்.

இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை டான் ஸோங்கி உடன் மோதிய வைஷாலி 11 சுற்றுகளில், 8 புள்ளிகளைப் பெற்று தொடரை வென்றார். வைஷாலி கிராண்ட் செஸ் தொடரை வெல்வது இது இரண்டாவது முறையாகும்.

இதன்மூலம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.

மேலும் இந்த வெற்றியின் மூலம் கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்குத் தேர்வாகியுள்ள மூன்றாவது இந்திய வீராங்கனையாகவும் வைஷாலி மாறியுள்ளார். முன்னதாக இந்திய வீராங்கனைகளான திவ்யா தேஷ்முக், கோனெரு ஹம்பி ஆகியோர் தேர்வாகினர்.

கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற நமது சென்னைப் பெண் வைஷாலிக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றி வெறும் ஒரு தனிப்பட்ட மைல்கல் மட்டுமல்ல, சென்னைக்கும், தமிழ்நாட்டிற்கும், இப்போது உலக அரங்கில் தங்கள் கனவுகள் பிரதிபலிப்பதைக் காணும் எண்ணற்ற இளம் பெண்களுக்கும் ஒரு கொண்டாட்டமாகும்" என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், " வைஷாலி ரமேஷ்பாபுவுக்கு வாழ்த்துக்கள். இது ஒரு சிறப்பான சாதனை என்றும் அவரது ஆர்வமும், அர்ப்பணிப்பும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News