விளையாட்டு

கனடா ஓபன் பேட்மிண்டன்: லக்சயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

Published On 2023-07-09 03:44 GMT   |   Update On 2023-07-09 03:44 GMT
  • அரையிறுதியில் ஜப்பான் வீரர் கென்ட்டா நிஜிமோட்டாவை லக்சயா சென் வீழ்த்தினார்.
  • மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியிடம் தோல்வியடைந்தார்.

கனடா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய இளம் வீரர் லக்சயா சென் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீரர் கென்ட்டா நிஜிமோட்டாவுடன் மோதிய லக்சயா சென், 21-17, 21-14 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று அசத்தினார்.

இதன்மூலம், ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பிறகு சர்வதேச போட்டியின் இறுதிப் போட்டிக்கு லக்சயா சென் தகுதி பெற்றுள்ளார். கடைசியாக ஆகஸ்ட் 2022 இல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, அரையிறுதியில் உலகின் நம்பர்-1 வீராங்கனை அகானே யமகுச்சியிடம் 14-21, 15-21 தோல்வியடைந்தார்.

சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார் பி.வி.சிந்து. கடந்த ஜனவரி மாதம் காயத்திலிருந்து மீண்டபின் எந்த பட்டத்தையும் வெல்லவில்லை. கணுக்காலில் காயம் ஏற்படுவதற்கு முன்பு ஆகஸ்ட் 2022இல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றார். அவர் மேட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் போட்டியில் இரண்டாம் இடத்தையும், மலேசியா மாஸ்டர்சில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.

Tags:    

Similar News