ஆசிய ஆக்கி இறுதிப் போட்டி: 4-வது முறையாக கோப்பையை வெல்லுமா இந்தியா? தென் கொரியாவுடன் இன்று பலப்பரீட்சை
- சாம்பியன் பட்டம் வெல்லும் அணி அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.
- இரு அணிகளும் மோதிய சூப்பர்-4 சுற்று ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது.
12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடைபெற்று வருகிறது.
8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் தென்கொரியா, மலேசியா, சீனா ஆகியவை சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. நேற்றுடன் சூப்பர் 4 சுற்று முடிவடைந்தது.
சூப்பர் 4 சுற்று முடிவில் இந்தியா 2 வெற்றி, 1 டிராவு டன் 7 புள்ளியுடன் முதல் இடத்தையும், தென் கொரியா 4 புள்ளியுடன் 2-வது இடத்தையும் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. மலேசியா, சீனா தலா 3 புள்ளிகள் பெற்றன.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா- தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.
இந்திய அணி தென் கொரியாவை வீழ்த்தி 4-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லுமா? என்று ஆவலடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு 2003, 2007, 2017 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை கைப்பற்றி இருந்தது. இந்த தொடரிலும் இரு அணிகளும் மோதிய சூப்பர்-4 சுற்று ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது. இதனால் இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
முன்னதாக மாலை 5 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மலேசியா-சீனா அணிகள் மோதுகின்றன.