விளையாட்டு
திலக் வர்மா

பெற்றோருக்காக சொந்தமாக வீடு வாங்குவதே லட்சியம் - மும்பை அணியின் இளம் வீரர் திலக் வர்மா சொல்கிறார்

Published On 2022-04-04 11:15 IST   |   Update On 2022-04-04 11:15:00 IST
ஐபிஎல் போட்டியில் கிடைக்கும் பணத்தை வைத்து எனது பெற்றோருக்காக வீடு வாங்குவதே எனது லட்சியம் என மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் திலக் வர்மா கூறியுள்ளார்.
மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட்டில் 11 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் மூன்று அணிகள் மட்டும் இன்னும் புள்ளி கணக்கை தொடங்காமல் உள்ளது. சென்னை (3), மும்பை (2), ஐதராபாத் (1) ஆகிய போட்டிகளில் விளையாடி தோல்வியே அடைந்துள்ளது. 

மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இரண்டு போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. முதல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் 2-வது போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியை தழுவியது.

மும்பை அணி தோல்வியை தழுவினாலும் இளம் வீரரான திலக் வர்மாவின் ஆட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. முதல் போட்டியில் 22 ரன்களும் 2-வது போட்டியில் 5 சிக்சர்களுடன் 61 ரன்கள் எடுத்திருந்தார். ஐபிஎல் ஏலத்தின் போது அவரை மும்பை இந்தியன்ஸ் அணி 1.7 கோடிக்கு வாங்கியது. ஏலத்திற்கு ஏற்றது போல அவரது ஆட்டம் சிறப்பானதாக இருந்தது.

இந்நிலையில் அவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் சொந்தமாக வீடு இல்லை என்றும் திலக் வர்மா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவன். எனது தந்தையின் குறைந்த சம்பளத்தில் தான் எனது கிரிக்கெட் செலவையும் சகோதரனின் படிப்பு செலவையும் பார்த்துக் கொண்டார். 

எங்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. இந்த ஐபிஎல் மூலம் சம்பாதித்து எனது பெற்றோருக்காக வீடு வாங்குவதே எனது குறிக்கோளாக கொண்டுள்ளேன். ஐபில் ஏலத்தின் போது எனது குடும்பத்தினரும் மற்றும் பயிற்சியாளரும் உணர்ச்சிவசப்பட்டனர். 

ஐபிஎல் ஏலம் நடந்து கொண்டிருக்கும் போது எனது பயிற்சியாளர் வீடியோ காலில் இருந்தார். நான் அதிகமாக ஏலம் போகும் போது பயிற்சியாளர் கண்ணீர் சிந்தினார். உடனே எனது பெற்றோருக்கு போன் செய்து விவரத்தை கூறியபோது அவர்களும் அழுதனர். எனது தாய் பேச வார்த்தைகள் இல்லை என என்னிடம் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இவ்வாறு திலக் வர்மா கூறினார்.

Similar News