விளையாட்டு
31 அணிகள் பங்கேற்கும் தேசிய சீனியர் கூடைப்பந்து சென்னையில் நாளை தொடக்கம்
தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி தமிழ்நாட்டில் 4-வது முறையாக நடைபெற இருக்கிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு சென்னையில் நடந்த போட்டியில் தமிழ்நாடு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சென்னை:
இந்திய கூடைப்பந்து சம்மேளனம் ஆதரவுடன் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.
இந்த போட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை (3-ந் தேதி) தொடங்குகிறது. வருகிற 10-ந் தேதி வரை 8 நாட்கள் இந்தப் போட்டி நடக்கிறது.
தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டியில் 31 அணிகள் பங்கேற்கின்றன. ஆண்கள் பிரிவில் 16 அணிகள் இடம் பெற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
தமிழக அணி “சி” பிரிவில் இருக்கிறது. உத்தரகாண்ட், டெல்லி, மிசோரம் ஆகியவையும் அந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன. ஏ பிரிவில் பஞ்சாப், குஜராத், கேரளா, தெலுங்கானா அணிகளும், பி பிரிவில் உத்தரப்பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், சர்வீசஸ் அணிகளும், டி பிரிவில் மத்திய பிரதேசம், அரியானா மேற்கு வங்காளம், இந்தியன் ரெயில்வே, ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
பெண்கள் பிரிவில் 15 அணிகள் கலந்து கொள்கின்றன. தமிழக அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளன இந்தியன் ரெயில்வே, டெல்லி, மராட்டியம் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.
உத்தரபிரதேசம், கேரளா, மத்திய பிரதேசம் பி பிரிவிலும் தெலுங்கானா, ஒடிசா, அரியானா, அசாம் சி பிரிவிலும் ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்காளம், கர்நாடகா டி பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.
இந்தியா முழுவதும் இருந்து 372 வீரர், வீராங்கனைகள், 50 அதிகாரிகள், 90 பயிற்சியாளர்கள் ஆகியோரை இந்த போட்டியில் காணலாம். 8 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை நேரில் ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசு தொகை மற்றும் பதக்கம் வழங்கப்படும். இது தவிர பார்வையாளர்களுக்கு சைக்கிள் பரிசு வழங்கப்படுகிறது.
தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி தமிழ்நாட்டில் 4-வது முறையாக நடைபெற இருக்கிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு சென்னையில் நடந்த போட்டியில் தமிழ்நாடு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. போட்டியை நடத்தும் மாநிலம் முதல் முறையாக பட்டம் வென்று அப்போது புதிய வரலாறு படைத்தது.
தமிழக அணி இதுவரை 10 முறை தேசிய சீனியர் பட்டத்தை கைப்பற்றி உள்ளது. தமிழக பெண்கள் அணி 2 முறை 2-வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாகும்.
மேற்கண்ட தகவலை தமிழ்நாடு கூடைப்பந்து சங்க தலைவர் மற்றும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளரும், இந்திய கூடைப்பந்து சம்மேளன துணைத் தலைவருமான ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...மியாமி ஓபன் டென்னிஸ்: இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் நவோமி-ஸ்வியாடெக் மோதல்