விளையாட்டு
ஏ டிவிசன் கைப்பந்து லீக்- 7 வெற்றியுடன் எஸ்.ஆர்.எம். அணி சாம்பியன்
ஏ டிவிசன் கைப்பந்து லீக் போட்டியில் எஸ்.ஆர்.எம். அணி தோல்வி எதையும் சந்திக்காமல் 7 வெற்றியுடன் 21 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.
சென்னை:
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் ‘ஏ’ டிவிசன் கைப்பந்து ‘லீக்’ போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது.
நேற்று நடந்த கடைசி ‘லீக்’ ஆட்டங்களில் எஸ்.ஆர்.எம். அணி 22-25, 25-15, 25-22, 26-24 என்ற கணக்கில் சுங்க இலாகாவையும், ஐ.ஓ.பி. 25-23, 25-22, 25-16 என்ற கணக்கில் இந்தியன் வங்கியையும் தோற்கடித்தன.
எஸ்.ஆர்.எம். அணி தோல்வி எதையும் சந்திக்காமல் 7 வெற்றியுடன் 21 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது. ஐ.ஓ.பி. 6 வெற்றி, 1 தோல்வியுடன் 18 புள்ளியுடன் 2-வது இடத்தை பிடித்தது. தமிழ்நாடு போலீஸ், சுங்க இலாகா, இந்தியன் வங்கி, டி.ஜி. வைஷ்ணவா, செயிண்ட் ஜோசப்ஸ், லயோலா முறையே 3 முதல் 8-வது இடங்களை பிடித்தன.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு சென்னை மாவட்ட கைப்பந்து சங்க சேர்மன் எஸ்.என்.ஜெயமுருகன் தலைமை தாங்கினார். வருமானவரி கூடுதல் இயக்குனர்கள் பி.திவாகர், பி.எஸ்.சிவசங்கரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். சாம்பியன் பட்டம் வென்ற எஸ்.ஆர்.எம் அணிக்கு ஆச்சி கோப்பையுடன் ரூ.1 லட்சமும், 2-வது இடம் பெற்ற ஐ.ஓ.பி. அணிக்கு ரோமா கோப்பையுடன் ரூ.75 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது. ரோமா குழும நிர்வாக இயக்குனர் ஆர்.வி.எம்.ஏ.ராஜன், ஜி.பி.ஆர். மெட்டல்ஸ் நிறுவன இயக்குனர் விக்ரம், சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் சி.ஸ்ரீகேசவன், செயல் துணைத்தலைவர் பி.ஜெகதீசன்,பொருளாளர் ஏ.பழனியப்பன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.