விளையாட்டு
வெற்றியை கொண்டாடும் இந்திய வீரர்கள்

ஷூட் அவுட் தோல்விக்கு பழிதீர்த்தது- புரோ ஹாக்கி லீக் தொடரில் அர்ஜென்டினாவை வென்றது இந்தியா

Published On 2022-03-20 17:19 GMT   |   Update On 2022-03-20 17:19 GMT
இன்றைய ஆட்டத்திலும் ஷூட் அவுட் முறை வரலாம் என்று எதிர்பார்த்த நிலையில், கடைசி நிமிடத்தில் மன்தீப் சிங் அபாரமாக கோல் அடித்து, அணியை வெற்றி பெறச் செய்தார்.
புவனேஸ்வர்:

புரோ ஹாக்கி லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி, அர்ஜென்டினா அணியுடன் விளையாடியது. நேற்று நடந்த போட்டியில், ஷூட் அவுட் முறையில் இந்தியா 1-3 என்ற கோல்கணக்கில் தோல்வியை தழுவிய நிலையில், இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் வெற்றி பெறும் முனைப்பில் ஆக்ரோஷமாக விளையாடினார்கள். ஆட்டத்தின் பெரும்பாலான நேரத்தை  தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அர்ஜென்டினா வீரர்களும் கடும் சவால் அளித்தனர். 

முதல் பாதியில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் அர்ஜென்டினா சுதாரித்தது.  56வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் மார்ட்டின் பீல்டு கோல் அடிக்க, இரண்டு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தன. இதனால் இன்றைய ஆட்டத்திலும் ஷூட் அவுட் முறை வரலாம் என்ற நிலை இருந்தது. அனால் கடைசி நிமிடத்தில் மன்தீப் சிங் அபாரமாக கோல் அடித்து, அணியை வெற்றி பெறச் செய்தார். 

இந்தியா சார்பில் ஜக்ராஜ் 20 மற்றும் 52வது  நிமிடங்களில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் கோல் அடித்தார். ஹர்திக் சிங் 17வது நிமிடத்தில் கோல் அடித்தார். போட்டி முடிய 26 வினாடிகள் இருந்தபோது மன்தீப் சிங் வெற்றி கோலை பதிவு செய்ய, இந்தியா 4-3 என வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 16 புள்ளிகளுடன், 2ம் இடத்தில் நீடிக்கிறது.  நெதர்லாந்து அணி முதலிடத்தில் உள்ளது. அர்ஜென்டினா அணி 4ம் இடத்தில் உள்ளது.

அடுத்து இந்திய அணி, ஏப்ரல் 2 மற்றும் ஏப்ரல் 3 ஆகிய நாட்களில் இங்கிலாந்து அணியுடன் விளையாடுகிறது.
Tags:    

Similar News