விளையாட்டு
கோல் அடிக்க முயற்சிக்கும் இந்திய வீரர்

புரோ ஹாக்கி லீக்- ஷூட் அவுட்டில் அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்தது இந்தியா

Update: 2022-03-19 16:58 GMT
ஆட்ட நேர முடிவின்போது இரு அணிகளும் 2-2 என சமநிலையில் இருந்ததால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
புவனேஸ்வர்:

புரோ ஹாக்கி லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி, அர்ஜென்டினா அணியுடன் விளையாடியது. புவனேஸ்வர் கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியின் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து சமநிலையில் இருந்தன. 

இந்திய அணி தரப்பில் குர்ஜந்த் சிங் (38வது நிமிடம்), மன்தீப் சிங் (60வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்திருந்தனர். அர்ஜென்டினா தரப்பில் 45வது நிமிடத்தில் நிகோலஸ் அகோஸ்டா, 52வது நிமிடத்தில் நிகோலஸ் கீனன் கோல் அடித்தனர்.

ஆட்ட நேர முடிவின்போது 2-2 என சமநிலையில் இருந்ததால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில் இந்தியா 1-3 என தோல்வியடைந்தது. இந்தியா தரப்பில் ஹர்மன்பிரீத் சிங் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.

இந்த போட்டியின் வெற்றியால் போனஸ் புள்ளியுடன், மொத்தம் 11 புள்ளிகளுடன் அர்ஜென்டினா 4வது இடத்திற்கு முன்னேறியது. இந்திய அணி 13 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது. நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் மீண்டும் இரு அணிகளும் மோத உள்ளன. 
Tags:    

Similar News