விளையாட்டு
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது இந்தியா
மெக் லேனிங் 107 பந்தில் 97 ரன்கள் விளாச, இலக்கை 49.3 ஓவரில் எட்டி வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. இதன்மூலம் ஐந்து போட்டிகளிலும் வெற்றியை ருசித்துள்ளது.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா முறையே 10, 12 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.
ஆனால், அதன்பின் வந்த யாஸ்டிகா பாடியா (59), மிதாலி ராஜ் (68), ஹர்மன்ப்ரீத் கவுர் (57) ஆகியோர் அரைசதம் விளாசி அசத்தினர். ஆஸ்திரேலியா அணி சார்பில் டார்சி பிரவுன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர், 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீராங்கனைகள் ஹெய்ன்ஸ் (43), அலிசா ஹீலி (72) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடுத்து வந்த கேப்டன் லேனிங் 97 ரன்கள் விளாச ஆஸ்திரேலியா 49.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா விளையாடி ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
இதையும் படியுங்கள்... மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்திற்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி