விளையாட்டு
ஜோ ரூட்

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஜோ ரூட் மீண்டும் சதம்- இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 244 ரன்

Published On 2022-03-17 10:38 IST   |   Update On 2022-03-17 10:38:00 IST
தொடக்க ஜோடி ஏமாற்றம் அளித்தாலும் கேப்டன் ஜோ ரூட் பொறுப்புடன் விளையாடி சதம் விளாச, இங்கிலாந்து முதல் நாளில் 244 ரன்கள் சேர்த்தது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆன்டிகுவாவில் நடந்த முதல் போட்டி டிராவில் முடிந்தது.  2-வது டெஸ்ட் போட்டி பிரிட்ஜ் டவுனில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கடந்த போட்டியில் சதம் அடித்த தொடக்க வீரர் கிராவ்லி ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரர் அலெக்ஸ் லீஸ் 30 ரன்னில் வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோ ரூட்- டான் லாரன்ஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 199 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். 116-வது டெஸ்டில் ஆடும் அவருக்கு இது 25-வது செஞ்சூரியாகும். ஜோ ரூட் முதல் டெஸ்டிலும் சதம் அடித்து இருந்தார்.



ஆட்டம் முடியும் தருவாயில் லாரன்ஸ் ஆட்டம் இழந்தார். அவர் சதம் அடிக்க முடியாமல் போனது ஏமாற்றமே. லாரன்ஸ் 91 ரன்னில் ஹோல்டர் பந்தில் பெவிலியன் திரும்பினார். நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 244 ரன் எடுத்து இருந்தது. ஜோ ரூட் 119 ரன்னுடன் களத்தில் உள்ளார். 

Similar News