விளையாட்டு
சூர்யகுமார் யாதவ்

வேற்று கிரகத்தில் பேட்டிங் செய்ததுபோல் இருந்தது: சூர்யகுமார் யாதவை பாராட்டிய தினேஷ் கார்த்திக்

Published On 2022-01-25 11:47 GMT   |   Update On 2022-01-25 11:47 GMT
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 ரன்னில் தோல்வியடைந்தாலும், சூர்யகுமார் யாதவ் ஆடிய விதம் அனைவரையும் ஈர்த்தது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. மூன்று போட்டிகளில் ஒன்றில் கூட இந்திய அணியால் வெற்றி பெற முடியாமல் ஒயிட்வாஷ் ஆனது.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. வெங்கடேஷ் அய்யர் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்  கொள்ளவில்லை. தீபக் சாஹர், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக விளையாடி வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டனர்.

கடைசி போட்டியில் இந்தியா 288 ரன் இலக்கை நோக்கி சென்றது. 283 ரன்கள் எடுத்து 4 ரன்னில் வெற்றியை நழுவ விட்டது. இந்திய அணியை இலக்கை நோக்கிச் செல்ல சூர்ய குமார் யாதவ் பேட்டிங்கும் முக்கிய காரணம். அவர் 32 பந்தில் 39 ரன்கள் சேர்த்தார். இதில் 4 பவுண்டரி, 1 சிக்சர் அடங்கும்.

39 ரன்கள் அடித்தாலும், அவரது பேட்டிங் ஸ்டைல் மிகவும் சூப்பராக இருந்தது. அவர் வேற்று கிரகத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார் என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் புகழாரம் சூட்டியுள்ளார்.




சூர்யகுமார் யாதவ் குறித்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

சூர்யகுமார் யாதவ் முற்றிலும் வேற்று கிரகத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். பொசிசன், ஷாட்ஸ், வெளிப்படுத்துதல் அனைத்தும் சூப்பர். இக்கட்டான சூழ்நிலையில் பேட்டிங் செய்யும் வழியை எளிமையாக்கினார். அவருக்கும் அதிக அளவில் வாய்ப்பு கொடுத்தால், இந்திய அணிக்காக அற்புதம் படைப்பார். ஆனால், அவருக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும். தற்போது அவர் பேட்டிங் செய்ய வரும்போது, அடுத்த போட்டியில் நீடிப்போமா என்ற நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். அவருக்கு பீல்டிங் அமைப்பது மிகவும் கடினம்.

சூர்யகுமார் யாதவால் இந்த வேகத்துடன் எந்த இடத்திலும் விளையாட முடியும். மும்பை இந்தியன் அணிக்காக அவர் 3-வது இடத்தில் களம் இறங்கி சிறப்பாக விளையாடி வருகிறார். அவரால் 4-வது அல்லது 5-வது இடத்தில் களம் இறங்கியும் ரன் அடிக்க முடியும். ஒருநாள் போட்டியில் அவரை 5-வது அல்லது 6-வது இடத்தில் களம் இறங்க வேண்டும். ஏனென்றால், அவரால் உடனடியாக அணியின் நிலையை மாற்ற முடியும்’’ என்றார்.
Tags:    

Similar News