விளையாட்டு
போராடி தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது: கே.எல். ராகுல் ஆதங்கம்
நாங்கள் எங்கு தவறு செய்தோம் என்று தெளிவாக தெரிகிறது. ஆல்-ரவுண்டர் தீபக் சாஹர் போட்டியில் வெற்றிபெற கூடிய வாய்ப்பை அளித்தார் என கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோற்று ‘ஒயிட் வாஷ்’ ஆனது. கேப்டவுனில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 49.5 ஓவர்களில் 287 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 288 ரன் இலக்காக இருந்தது.
தொடக்க வீரரும், விக்கெட் கீப்பருமான குயிண்டன் டி காக் 130 பந்துகளில் 124 ரன்னும் (12 பவுண்டரி, 2 சிக்சர்), வான் டெர் டஸ்சன் 52 ரன்னும் எடுத்தனர். பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், தீபக் சாஹர், பும்ரா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் விளையாடிய இந்திய அணி கடுமையாக போராடி 4 ரன்னில் தோல்வியை தழுவியது. 49.2 ஓவர்களில் 283 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
முன்னாள் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 65 ரன்னும், தவான் 61 ரன்னும் எடுத்தனர். 7-வது வீரராக களம் இறங்கிய தீபக் சாஹர் 34 பந்தில் 54 ரன் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். அவரால்தான் இந்திய அணி நல்ல நிலைக்கு வந்தது. 48-வது ஓவரில் அவர் ஆட்டமிழந்தது பாதிப்பை ஏற்படுத்தியது.
ஒருநாள் போட்டிக்கான கேப்டன் ரோகித் சர்மா காயத்தால் விலகியதால், லோகேஷ் ராகுல் அணிக்கு தலைமை தாங்கினார். இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிடம் 3 போட்டியிலும் தோற்று தொடரை இழந்தது. ஏற்கனவே டெஸ்ட் தொடரையும் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது.
நேற்றைய போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து தற்காலிக கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது:-
நாங்கள் எங்கு தவறு செய்தோம் என்று தெளிவாக தெரிகிறது. ஆல்-ரவுண்டர் தீபக் சாஹர் போட்டியில் வெற்றிபெற கூடிய வாய்ப்பை அளித்தார். கடுமையாக போராடியும் ஆட்டத்தின் முடிவில் வெற்றி பெற முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
தீபக் சாஹரின் ஆட்டம் மிகவும் பிரமாதமாக இருந்தது. எங்கள் வீரர்களின் ஷாட் மோசமாக இருந்தது. சரியான திசையை நோக்கி நாங்கள் அடிக்கவில்லை.
இவ்வாறு லோகேஷ் ராகுல் கூறினார்.
இந்திய அணி அடுத்து சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் ஆடுகிறது.