டி காக் சதம் அடிக்க, வான் டெர் டஸ்சன் அரைசதம் விளாச இந்தியாவுக்கு 288 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா.
3-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவுக்கு 288 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா
பதிவு: ஜனவரி 23, 2022 18:11 IST
டி காக், வான் டெர் டஸ்சன்
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் தீபக் சாஹர், ஜயந்த் யாதவ், சூர்யகுமார் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
குயிண்டான் டி காக், மலான் அகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மலான் 1 ரன் எடுத்த நிலையில் தீபக் சாஹர் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டெம்பா பவுமா 8 ரன்னில் ரன்அவுட் மூலம் வெளியேறினார். ஒரு பக்கம் இரண்டு விக்கெட் இழந்தாலும், மறுமுனையில் டி காக் அதிரடியாக விளையாடினார்.
அவருக்கு துணையாக விளையாடிய மார்கிராம் 15 ரன்கள் எடுத்த நிலையில் சாஹர் பந்தில் வெளியேறினார். இதனால் தென்ஆப்பிரிக்கா அணி 6.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 12.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்தது.
4-வது விக்கெட்டுக்கு டி காக் உடன் வான் டெர் டஸ்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டி காக் 59 பந்தில் அரைசதம் அடித்தார். தென்ஆப்பிரிக்கா 19.4 ஓவரில் 100 ரன்னையும், 27.4 ஓவரில் 150 ரன்னையும் கடந்தது.
இந்த ஜோடியின் ஆட்டத்தை பார்க்கும்போது தென்ஆப்பிரிக்கா எளிதாக 300 ரன்களை கடக்கும் நிலை இருந்தது. டி காக் 108 பந்தில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் விளாசினார். இது அவரின் 17-வது சதமாகும். மறுமுனையில் டஸ்சன் 53 பந்தில் அரைசதம் அடித்தார்.
தென்ஆப்பிரிக்கா 35.4 ஓவரில் 214 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடியை பும்ரா பிரித்தார். டி காக் 130 பந்தில் 12 பவுண்டரி, 2 சிக்சருடன் 124 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் வான் டெர் டஸ்சன் 59 பந்தில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது தென்ஆப்பிரிக்கா 36.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின் தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் சற்று குறைய ஆரம்பித்தது. டேவிட் மில்லர் ஒருபக்கம் நிலைத்து நின்று விளையாடி மறுமுனையில் பெலுக்வாயோ (4), பிரிட்டோரியஸ் (24), மகாராஜ் (6) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
டேவிட் மில்லர் 38 பந்தில் 39 ரன்கள் எடுத்து வெளியேற, தென்ஆப்பிரிக்கா 49.5 ஓவரில் 287 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.
இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும் தீபக் சாஹர், பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Related Tags :