விளையாட்டு
6 விக்கெட் வீழ்த்திய மார்க் வுட்

ஹோபர்ட் டெஸ்ட் - இங்கிலாந்து வெற்றி பெற 271 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

Update: 2022-01-16 09:14 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்தின் மார்க் வுட் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ஹோபர்ட்:

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா 3-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடி சதமடித்து 101 ரன்னில் அவுட்டானார். கிரீன் 74 ரன்கள் எடுத்தார். லபுசேன் 44 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து சார்பில் பிராட், மார்க் வுட் தலா 3 விக்கெட்டும், ராபின்சன், கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிறிஸ் வோக்ஸ் 36 ரன்னும், ஜோ ரூட் 34 ரன்னும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

123 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. இங்கிலாந்து அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கிய ஆஸ்திரேலியா விரைவில் விக்கெட்டுகளை இழந்தது.

அதன்படி, ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அலெக்ஸ் கேரி மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 49 ரன்னில் அவுட்டானார்.

இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 6 விக்கெட்டும், பிராட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.
Tags:    

Similar News