விளையாட்டு
பும்ரா - விராட் கோலி

விராட் கோலி தலைமையில் பும்ராவுக்கு 100 விக்கெட்

Published On 2022-01-13 07:38 GMT   |   Update On 2022-01-13 07:38 GMT
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பும்ரா அபாரமாக பந்து வீசி 42 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.
கேப்டவுன்:

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.

இந்தியா முதல் இன்னிங்சில் 223 ரன்னில் ஆல் அவுட் ஆனது. விராட் கோலி அதிகபட்சமாக 79 ரன்னும், புஜாரா 43 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபடா 4 விக்கெட்டும், ஜான்சென் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன் எடுத்து இருந்தது.

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்கா 210 ரன்னில் சுருண்டது. பீட்டர்சன் அதிக பட்சமாக 72 ரன் எடுத்தார்.

பும்ரா அபாரமாக பந்து வீசி 42 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். உமேஷ் யாதவ், முகமது ‌ஷமி தலா 2 விக்கெட்டும், ‌ஷர்துல் தாகூர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

13 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன் எடுத்து இருந்தது. அகர்வால் 7 ரன்னில் ரபடா பந்திலும், ராகுல் 10 ரன்னில் ஜான்சென் பந்திலும் ஆட்டம் இழந்தனர். கோலி 14 ரன்னிலும், புஜாரா 9 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

இந்திய அணி தற்போது 70 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கைவசம் 8 விக்கெட் உள்ளது. இன்றைய 3-வது நாள் ஆட்டம் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

28 வயதான பும்ரா 27 டெஸ்டில் விளையாடி 112 விக்கெட் கைப்பற்றி உள்ளார். அவர் ஒரு இன்னிங்சில் 7-வது முறையாக 5 விக்கெட்டை தொட்டு உள்ளார்.

பும்ரா பெரும்பாலும் விராட் கோலி தலைமையில்தான் அதிகமான டெஸ்டில் விளையாடி உள்ளார். கோலி தலைமையின் கீழ் அவர் 100 விக்கெட்டை எடுத்துள்ளார். ஜான்சென் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் அவர் 100-வது விக்கெட்டை தொட்டார்.

விராட் கோலியின் தலைமையின் கீழ் பும்ரா 24 டெஸ்டில் விளையாடி 102 விக்கெட் கைப்பற்றி உள்ளார். சராசரி 21.23 ஆகும். 27 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியது அவரது சிறந்த பந்து வீச்சாகும். 
Tags:    

Similar News