விளையாட்டு
இந்திய அணியை வீழ்த்தியது 2021-ம் ஆண்டில் பாகிஸ்தானின் சிறந்த தருணம் - பாபர் அசாம்
நாங்கள் இப்போது திறமையான இளம் வீரர்களை உருவாக்கி வருவது மிகவும் திருப்தி அளிக்கிறது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார்.
கராச்சி:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தோம். ஒரு அணியாக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 2021-ம் ஆண்டில் என்னை அதிகமாக காயப்படுத்தியது இந்த தோல்வி தான். இதே உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை நாங்கள் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தோம்.
இது ஒரு அற்புதமான சாதனை. ஏனெனில் இதற்கு முன்பு எந்த ஒரு உலக கோப்பை போட்டிகளிலும் இந்திய அணியை நாங்கள் வென்றதில்லை. முதல் முறையாக கிட்டிய இந்த வெற்றி தான் 2021-ம் ஆண்டில் எங்களது சிறந்த தருணமாகும். இப்போது நாங்கள் திறமையான இளம் வீரர்களை உருவாக்கி வருவது மிகவும் திருப்தி அளிக்கிறது. பேட்டிங்கில் தனிப்பட்ட சாதனைகள் அணியின் வெற்றிக்கு உதவினால் அது தான் எனக்கு மகிழ்ச்சியை தரும்.
இவ்வாறு பாபர் அசாம் கூறினார்.