விளையாட்டு
இந்திய அணி வீரர்கள்

கடைசி மூன்று ‘பாக்சிங் டே’ டெஸ்டிலும் இந்திய அணி அசத்தல்

Published On 2021-12-30 20:07 IST   |   Update On 2021-12-30 20:07:00 IST
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான செஞ்சூரியன் டெஸ்டில் இந்திய அணி 113 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் தொடங்கும் டெஸ்ட் போட்டி ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி என அழைக்கப்படுகிறது.

இந்தியா இதற்கு முன் 2018 மற்றும் 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் விளையாடியது.

2018-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் புஜாரா சதத்தால் இந்தியா 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 151 ரன்னில் சுருண்டது.

2-வது இன்னிங்சில் இந்தியா 106 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 399 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 261 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



கடந்த ஆண்டு (2020) ரகானோ தலைமையில் இந்திய அணி ‘பாக்சிங் டே’ டெஸ்டில் மெர்போர்னில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 195 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சில் ரகானே சதம் அடிக்க இந்தியா 326 ரன்கள் குவித்தது.

பின்னர் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 200 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியாவுக்கு 70 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா 2 விக்கெட்டை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இன்றுடன் முடிவடைந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடர்ந்து மூன்று ‘பாக்சிங் டே’ டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

Similar News