விளையாட்டு
ஜூனியர் ஆசியக் கோப்பை- வங்காளதேசத்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது இந்தியா
துபாயில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
சார்ஜா:
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. சார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா - வங்காளதேச அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சாயிக் ரஷீத் 90 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார்.
இதையடுத்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. மஹ்பிஜுல் இஸ்லாம் (26), ஆரிபுல் இஸ்லாம் (42) ஆகியோர் தவிர மற்ற வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். 38.2 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த அந்த அணி 140 ரன்களில் சுருண்டது.
இதனால் இந்திய அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. இந்த போட்டி துபாயில் நாளை நடக்கிறது.