விளையாட்டு
செஞ்சூரியன் டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு 305 ரன்கள் வெற்றி இலக்கு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 2ம் இன்னிங்சில் 174 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
செஞ்சூரியன்:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் நகரில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து, மூன்றாம் நாள் முடிவில் 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 130 ரன்கள் முன்னிலையுடன் 2ம் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆடிய இந்தியா, உணவு இடைவேளைக்கு பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, 174 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 34 ரன்கள் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா, மார்கோ ஜான்சென் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கி விளையாடி வருகிறது. நாளை ஒருநாள் ஆட்டம் மீதமுள்ளது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லாத நிலையில், இந்த இலக்கை தென் ஆப்பிரிக்கா எட்டிப்பிடிப்பது சாத்தியம் இல்லை. மழை பெய்தால் ஆட்டத்தின் போக்கில் மாற்றம் ஏற்படலாம்.