விளையாட்டு
வெற்றி பெற்ற தமிழக அணி

கடைசி பந்தில் திரில் வெற்றி - சவுராஷ்டிராவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தமிழகம்

Published On 2021-12-25 00:49 IST   |   Update On 2021-12-25 00:49:00 IST
சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாபா அபராஜித் அபாரமாக ஆடி சதமடித்து அசத்தினார்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில்  தமிழகம் மற்றும் சவுராஷ்டிரா அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய சவுராஷ்டிரா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு  310 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய விக்கெட் கீப்பர் ஜாக்சன் 134 ரன்கள் குவித்து அவுட்டானார். விஷ்வராஜ் ஜடேஜா 52 ரன்னும், வாசவதா 57 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

தமிழக அணி சார்பில் விஜய் சங்கர் 4 விக்கெட்டும், சிலம்பரசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதையடுத்து, 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பாபா அபராஜித் பொறுப்புடன் விளையாடி சதமடித்து அசத்தினார். அவர் 122 ரன்னில் வெளியேறினார். பாபா இந்திரஜித் 50 ரன்னில் அவுட்டானார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 31 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக ஆடி 70 ரன் எடுத்தார். மிகவும் பரபரப்பாக கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான ரன்னை தமிழக அணி எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மற்றொரு அரையிறுதி போட்டியில், சர்வீசஸ் அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இமாசல பிரதேசம் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் தமிழகம் மற்றும் இமாசல பிரதேசம் அணிகள் மோதுகின்றன.

Similar News