விளையாட்டு
அஸ்வின் - ரவிசாஸ்திரி

எனது கருத்து அஸ்வினை காயப்படுத்தி இருந்தால் மகிழ்ச்சிதான் - முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி

Published On 2021-12-24 12:34 GMT   |   Update On 2021-12-25 08:31 GMT
குல்தீப் யாதவ் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசினால் வெளிநாட்டில் சுழற்பந்தில் இந்தியாவின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக இருக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளது என ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
மும்பை:

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சமீபத்தில் அளித்த பேட்டியில் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறிய கருத்து தன்னை காயப்படுத்தியதாக தெரிவித்தார்.

2019-ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது ஒரு டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தினார்.

அப்போது இந்திய அணி பயிற்சியாளராக இருந்த ரவிசாஸ்திரி, குல்தீப் யாதவை புகழ்ந்து பேசினார். அவர் கூறும்போது, “ஒவ்வொரு வீரருக்கும் ஒரு காலத்தில் முடிவு வரும். தற்போது குல்தீப் யாதவ் காலம் தொடங்கி விட்டது. வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் குல்தீப்தான் நம்பர் ஒன் பவுலர்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அஸ்வின் கூறும்போது, “ரவிசாஸ்திரி மீது அதிக மதிப்பு உள்ளது. ஆனால் அவர் பேட்டி கொடுத்த அந்த வினாடியில் நான் முற்றிலும் நொறுங்கி விட்டேன். சக வீரர்கள் வெற்றியில் மகிழ்ச்சி கொள்பவன் நான். குல்தீப் சிறப்பாக செயல்பட்டதை எண்ணி மகிழ்ந்தேன்.

ஒரு வீரரை புகழ்வதற்காக மற்றவரை கீழே தள்ளக் கூடாது. ரவிசாஸ்திரி கூறிய கருத்து என்னை பஸ்சுக்கு கீழே தள்ளி விட்டது போல் இருந்தது. ஆனாலும் வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டேன். ஏனென்றால் அது எனது அணியின் வெற்றி என்று கூறினார்.

இந்த நிலையில் அஸ்வின் கூறிய கருத்துக்கு ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஒரு பயிற்சியாளராக ஒரு வி‌ஷயத்தை நான் உங்களுக்கு சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொருவரின் ரொட்டியிலும் வெண்ணையை தடவி விடுவது எனது பணி அல்ல. பயிற்சியாளராக எனது பொறுப்பு. அனைவருக்கும் பிடித்தாற்போல் பேசுவது அல்ல. எனது வேலை உண்மையை சொல்வதுதான்.

பயிற்சியாளர் ஒருவரை அழைத்து சவால் விட்டால் இனி நான் பயிற்சிக்கே செல்ல மாட்டேன் என்று வீட்டில் படுத்து அழுவது ஒரு ரகம். ஆனால் என்னை போன்றோர் அவர்களின் சவாலை நிறைவேற்றி காட்டுவேன் என்று உழைப்பது ஒரு ரகம்.

சிட்னியில் நடந்த டெஸ்டில் குல்தீப் அற்புதமாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார். வெளிநாட்டில் முதல் அல்லது 2-வது டெஸ்டில் விளையாடும் ஒரு இளம் வீரர் சிறப்பாக செயல்பட்டதால் அவரை பாராட்டினேன்.

அப்படி அவர் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசினால் வெளிநாட்டில் சுழற்பந்தில் இந்தியாவின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக இருக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளது என்றேன்.

எனது கருத்து அஸ்வினை காயப்படுத்தி இருந்தால் அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் அது அவரை வித்தியாசமாக ஏதாவது செய்ய வைக்கும்.

பஸ்சுக்கு அடியில் அஸ்வினை தள்ளி விட்டேன்தான். ஆனால் அதுபற்றி அஸ்வின் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் டிரைவரிடம் பஸ்சை இரண்டு அடிக்கு முன்பே நிறுத்த சொல்லி விட்டேன். இதனால் அஸ்வின் நொறுங்க மாட்டார்.

நான் அன்று அப்படி சொல்லாமல் இருந்திருந்தால் அஸ்வின் தனது உடற் தகுதியை மேம்படுத்தி இன்று உலகின் தலை சிறந்த பந்துவீச்சாளராக இருக்க மாட்டார். 3 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அஸ்வினையும், தற்போது உள்ள அஸ்வினையும் பாருங்கள். உண்மையை சொல்லி வீரர்களின் திறமையை வெளிகொண்ட வருவதே எனது பணி.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News