செய்திகள்
ஆடம் ஜம்பா

ஆடம் ஜம்பா பந்துவீச்சு அற்புதமாக இருந்தது - ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் பாராட்டு

Published On 2021-10-29 13:38 IST   |   Update On 2021-10-29 13:38:00 IST
இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு எப்போதும் சிறந்த சவாலாக இருக்கும். அடுத்து அந்த அணியுடன் மோதுவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் என பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

துபாய்:

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு துபாயில் நடந்த சூப்பர்-12 சுற்று லீக் ஆட்டத்தில் இலங்கையை ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவரில் 6 விக்கெட் 154 ரன் எடுத்தது. அதிகபட்சமாக குஷால் பெரைரா, நிசாங்கா தலா 35 ரன்னும், பானுகா ராஜபக்சே 33 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 17 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்து வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 65 ரன் எடுத்தது.

இலங்கை அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. பவர்- பிளேயான முதல் 6 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 53 ரன் எடுத்தது. அதன்பின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா சிறப்பாக பந்து வீசினார். அவர் விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கையின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார்.

ஆடம் ஜம்பா 4 ஓவர் வீசி 12 ரன் மட்டுமே விட்டு கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். மேலும் அவரது பந்துவீச்சில் ஒரு பவுண்டரி, சிக்சர் கூட அடிக்கப்படவில்லை. வெற்றி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறியதாவது:-

இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டோம். இலங்கை அணி தொடக்கத்தில் ரன் குவித்தது. அதன்பின் ஆடம் ஜம்பா மற்றும் மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக பந்து வீசினர்.

மிடில் ஓவர்களில் அவர்கள் தொடர்ந்து தலா இரண்டு ஓவர்கள் வீசி விக்கெட்டுகளை கைப்பறினார்.

பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆட்டத்தில் பவர்-பிளேயில் ஓவருக்கு 15 ரன் எடுக்கப்படலாம் என்று நினைத்தேன். ஆனால் ஓவருக்கு 8 ரன்னுக்கு மேலேயே விட்டு கொடுத்தோம்.

ஆடம் ஜம்பாவுக்கு இன்றைய நாள் அற்புதமாக அமைந்தது. இலங்கையின் பவர்-பிளே ஆட்டம் சிறப்பாக இருந்த நிலையில் ஆடம் ஜம்பா ஆட்டத்தை கட்டுப்படுத்திய விதம் சிறப்பானது.

அவர் பெரிய விக்கெட்டுகளை கைப்பற்றிடினார். அவரிடமிருந்து உலக தரம் வாய்ந்த செயல்பாடு வெளிப்பட்டது. டேவிட் வார்னர் நன்றாக பேட்டிங் செய்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு எப்போதும் சிறந்த சவாலாக இருக்கும். அடுத்து அந்த அணியுடன் மோதுவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

குரூப்-1 பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா 2-வது வெற்றியை பெற்றது. முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இருந்தது.

Similar News