செய்திகள்
இடைநீக்கம்

பாகிஸ்தான் அணி வீரர்களை புகழ்ந்து கோஷமிட்ட காஷ்மீர் மாணவர்கள் இடைநீக்கம்

Published On 2021-10-27 03:32 GMT   |   Update On 2021-10-27 03:32 GMT
டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் வீரர்களை புகழ்ந்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டதாகக்கூறி காஷ்மீரை சேர்ந்த மூன்று பொறியியல் மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
ஆக்ரா:

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் பிச்புரி கிராமத்தில் உள்ள ராஜா பல்வந்த் சிங் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் தங்கி படிக்கும் காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள் மூன்று பேர், டி20 உலககோப்பையில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியை புகழ்ந்து கோஷங்கள் எழுப்பியும், வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் போட்டும் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மூன்று பேரையும் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர்.

இதுகுறித்து கல்வி நிறுவனத்தின் நிர்வாக மற்றும் நிதித்துறை இயக்குநர் டாக்டர் பங்கஜ் குப்தா கூறுகையில், "பிரதமரின் சூப்பர் ஸ்பெஷல் திட்டத்தின் கீழ் மாணவர்கள் படித்து வந்தனர். இது தொடர்பாக உடனடி நடவடிக்கையாக மாணவர்கள் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாணவர்களின் செயலை நாங்கள் பிரதமர் அலுவலகம் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ-க்கும் தெரிவித்துள்ளோம். இருப்பினும், மாணவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்" என்று கூறினார்.

இதற்கிடையே, பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் உள்ளூர் தலைவர் ஷைலு பண்டிட் கூறுகையில், "பிச்புரி ஆர்.பி.எஸ். பொறியியல் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியதாகவும், சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவுகள் பகிரப்பட்டதாகவும் தெரியவந்தது. அதன்பிறகு, இளைஞர் பாஜக தலைவர் கௌரவ் ரஜாவத்துடன் கல்லூரிக்கு சென்று விசாரித்தபோது மாணவர்களை இடைநீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர்.

இருப்பினும், தேச விரோதச் செயலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஜகதீஷ்புரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்." என்றார். மேலும், "புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று நகர எஸ்.பி. அக்ர விகாஸ் குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News