செய்திகள்
ஜோ ரூட், விராட் கோலி

5-வது டெஸ்ட் போட்டி ரத்துக்கு ஐ.பி.எல். காரணமல்ல: இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு

Published On 2021-09-12 10:00 GMT   |   Update On 2021-09-12 10:00 GMT
இந்தியா- இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்டில் இந்தியா விளையாட மறுத்ததற்கு ஐ.பி.எல். போட்டிதான் முக்கிய காரணம் என முன்னாள் வீரர்கள் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 4 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் மான்செஸ்டரில் தொடங்க இருந்தது. ஆனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர், பிசியோதரபிஸ்ட் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை இந்திய கிரிக்கெட் வாரியமும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் ஆலோசித்து எடுத்தன.

வருகிற 19-ந் தேதி தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு பாதிப்பு ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன்களான நாசர் உசேன், மைக்கேல் வாகன் ஆகியோர் விமர்சித்து உள்ளனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர் டாம் ஹாரிசன் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதில் ஐ.பி.எல். போட்டி தொடர் எந்த பங்கையும் கொண்டிருக்கவில்லை. நான் தெளிவாக கூறுவது இதற்கும் ஐ.பி.எல். போட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இது ஒரு கொரோனா காரணமான ரத்து அல்ல. இது ஒரு அணியின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பற்றிய தீவிர கவலை காரணமாக ரத்து செய்யப்பட்ட போட்டி.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் 5-வது டெஸ்ட் ரத்து செய்யப்பட்டதில் போட்டி தொடரின் முடிவு பற்றி ஆலோசித்து தீர்ப்பு அளிக்கும்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதி உள்ளது. இதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார். 
Tags:    

Similar News