செய்திகள்
ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஐ.பி.எல். தொடர் வரப்பிரசாதம்: ரிக்கி பாண்டிங்
உலகக்கோப்பைக்கு ஐபிஎல் தொடரின் 2-வது பகுதி ஆட்டங்கள் சிறந்த தயார் படுத்துதல் தொடராக இருக்கும் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மீதமுள்ள போட்டிகளை 2-வது பாதியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.
அதன்படி அடுத்த மாதம் 19-ந்தேதி (செப்டம்பர்) முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டி முடிவடைந்த இரண்டு நாட்களில், அதாவது அக்டோபர் மாதம் 17-ந்தேதி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. நவம்பர் 14-ந்தேதி வரை நடக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அதிக அளவில் நடைபெறவில்லை. மேலும், ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், வார்னர் உள்பட முக்கிய வீரர்கள் வங்காளதேசம் உள்பட சில தொடர்களில் இருந்து விலகியுள்ளனர். இதனால் அவர்கள் தற்போது வரை சுமார் நான்கு மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் உள்ளனர்.
இந்த நிலையில் உலகக்கோப்பைக்கு முன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற இருப்பது, உலகக்கோப்பைக்கு சிறந்த தயார் படுத்துதலாக இருக்கும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘தற்போது வரை மூன்று நான்கு மாதங்களாக ஆஸ்திரேலிய வீரர்கள் அதிகமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. அவர்களுடைய ஆட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு உயர்தரமான கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாட வேண்டியது அவசியம்.
இதுபோன்ற சீதோஷ்ண நிலை மற்றும் வலுவான உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடுவது, அவர்கள் உலகக்கோப்பைக்கு தயார் ஆகுவதற்கு ஐபிஎல் தொடர் சிறந்த தயார்படுத்துதலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை’’ என்றார்.