செய்திகள்
அரை சதமடித்த கவுசிக் காந்தி

டி.என்.பி.எல்.: திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

Published On 2021-08-13 23:04 IST   |   Update On 2021-08-13 23:04:00 IST
திண்டுக்கல் அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி சிறப்பாக ஆடி அரை சதமடித்து அசத்தினார்.
சென்னை:

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் 2-வது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலாவது தகுதிச்சுற்று, வெளியேற்றுதல் சுற்றில் முதலில் பேட்டிங் செய்த இரண்டு அணிகளும் 150 ரன்களுக்கு மேல் அடிக்க முடியாமல் தோல்வியைத் தழுவின.

இதனால் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 150 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும் என களம் இறங்கினர். ஆனால் சேப்பாக் சூப்பர் கிங்ஸ் அணியின் சாய் கிஷோர், அலெக்சாண்டர் விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் ஆசைக்கு தடைபோட்டனர். அந்த அணியின் ஹரி நிஷாந்த் மட்டும் தாக்குப்பிடித்து 46 பந்தில் 56 ரன்கள் அடித்தார். விமல் குமார் 11 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவரில் 103 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டும், அலெக்சாண்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அதன்பின், 104 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் களம் இறங்கியது.  தொடக்க வீரராக களம் இறங்கிய கேப்டன் கவுசிக் காந்தி 41 பந்தில் 53 ரன்கள் எடுத்து வெற்றியை எளிதாக்கினார். ஜெகதீசன் 21 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ராதாகிருஷ்ணன் மற்றும் சசிதேவ் ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 16, 13 ரன்கள் அடிக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 16 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 106 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Similar News