செய்திகள்
லார்ட்ஸ் டெஸ்ட்: வந்த வேகத்திலேயே நடையை கட்டிய கே.எல். ராகுல், ரஹானே- உணவு இடைவேளை வரை இந்தியா 346/7
கே.எல். ராகுல், ரஹானே அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்தியா 2-வது நாள் முதல் செசன் ஆட்டத்தில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் எடுத்தது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, கே.எல். ராகுல் அபாரமாக விளையாட இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்திருந்தது.
ரோகித் சர்மா 83 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல் 127 ரன்களுடனும், ரஹானே 1 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரை கே.எல். ராகுல் சந்தித்தார். ஆலி ராபின்சன் பந்து வீசினார். முதல் பந்தில் இரண்டு ரன்கள் அடித்த நிலையில், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் ரஹானே ஆண்டர்சன் பந்தில் நேற்றைய 1 ரன்னிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார்.
6-வது விக்கெட்டுக்கு ரிஷாப் பண்ட் உடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான விளையாடியது. இதனால் இந்தியாவின் ஸ்கோர் 300 ரன்னைத் தாண்டியது.
இந்தியாவின் ஸ்கோர் 331 ரன்னாக இருக்கும்போது ரிஷாப் பண்ட் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமி ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
ஜடேஜா ஒரு பக்கம் நம்பிக்கையுடன் விளையாடினார். அடுத்து இஷாந்த் சர்மா களம் இறங்கினார். 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய முதல் செசனில் இந்தியா 70 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.