செய்திகள்
சாஜன் பிரகாஷ்

நீச்சல் வீரர் சாஜன் பிரகாஷ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி - இதுவரை 107 இந்தியர்கள் தகுதி பெற்றனர்

Published On 2021-06-27 11:25 IST   |   Update On 2021-06-27 11:25:00 IST
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் நீச்சல் வீரர் சாஜன் பிரகாஷ் ஆவார். 27 வயதான அவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

புதுடெல்லி:

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது.

ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் வில்வித்தை, தடகளம், பேட்மின்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், வாள்வீச்சு, ஆக்கி, ஜிம்னாஸ்டிக், கோல்ப், ஜூடோ, துடுப்பு படகு, பாய்மர படகு, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளில் இருந்து 58 வீரர்களும், 48 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 106 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் நீச்சல் போட்டியில் இருந்து ஒருவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலியின் ரோம் நகரில் நடந்த சர்வதேச நீச்சல் போட்டியில் இந்திய வீரர் சாஜன் பிரகாஷ் 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் ஒரு நிமிடம் 56.38 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார். இதன் மூலம் அவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

ஒலிம்பிக்குக்கு நுழைய ஒரு நிமிடம் 56.48 வினாடிகளில் கடக்க வேண்டும். சாஜன் பிரகாஷ் அந்த இலக்குக்கு முன்பே தொட்டு ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் நீச்சல் வீரர் சாஜன் பிரகாஷ் ஆவார். 27 வயதான அவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

Similar News