செய்திகள்
வாகன் - விராட் கோலி

இறுதிப் போட்டி என்றாலே ஒரே ஒரு ஆட்டம்தான் - கோலி கருத்துக்கு வாகன் பதிலடி

Published On 2021-06-26 07:38 GMT   |   Update On 2021-06-26 07:38 GMT
இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உலக டெஸ்ட் இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பே டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான வெற்றியாளரை ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை நடத்தி தீர்மானிப்பது சரியல்ல என கூறியிருந்தார்.

லண்டன்:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது ‘உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்க இனி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக இறுதி ஆட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் கோலி கூறும்போது, அடிப்படையில் யார் சிறந்த டெஸ்ட் அணி என்பதை ஒரே ஒரு போட்டியை வைத்து தீர்மானிப்பதை நான் முழுமையாக ஏற்கவில்லை என்றார்.

உலக டெஸ்ட் இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான வெற்றியாளரை ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை நடத்தி தீர்மானிப்பது சரியல்ல. 3 போட்டிகளாவது ஆட வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் 3 இறுதிப்போட்டி என்ற விராட் கோலியின் யோசனையை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஏற்க மறுத்துள்ளார்.

அவரது கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக வாகன் கூறியதாவது:-

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து திட்டமிட எங்கே இடமிருக்கிறது. 3 டெஸ்ட் போட்டிகளுக்காக ஐ.பி.எல். தொடரை 2 வாரங்கள் குறைத்து கொள்வார்களா? என்பது சந்தேகமே.

இறுதி போட்டி என்றாலே ஒரே ஒரு ஆட்டம்தான். அந்த ஒரு போட்டியில் அணிகள் திறமையாக விளையாட வேண்டும். இது வீரர்களுக்கு தெரியும். அதுதான் அவர்களுக்கு சிறந்த வீரர்கள் என்பதை காட்டுகிறது.

இவ்வாறு வாகன் கூறியுள்ளார்.

Tags:    

Similar News