செய்திகள்
பூஜாராணி

ஆசிய குத்துச்சண்டை : இந்திய வீராங்கனை பூஜாராணிக்கு தங்கப்பதக்கம்

Published On 2021-05-31 01:41 IST   |   Update On 2021-05-31 01:41:00 IST
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 75 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பூஜாராணி, மாவ்லோனோவாவை பதம் பார்த்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
துபாய்:

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்றிரவு நடந்த 75 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பூஜாராணி 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் மாவ்லோனோவாவை எளிதில் பதம் பார்த்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.



51 கிலோ பிரிவின் இறுதி ஆட்டத்தில் 6 முறை உலக சாம்பியனான இந்திய மூத்த வீராங்கனை மேரிகோம், கஜகஸ்தானின் நஸிம் கைஜாபாயை எதிர்கொண்டார். இதில் மேரிகோம் முதல் ரவுண்டில் தடுப்பாட்ட பாணியை கையாண்டதுடன் சில குத்துகளும் விட்டார். அடுத்த இரு ரவுண்டுகளில் இருவரும் ஆக்ரோஷமாக ஆடினர். இருப்பினும் எதிராளியின் கை சற்று ஓங்கியது. முடிவில் நடுவர்களின் தீர்ப்பின் அடிப்படையில் மேரிகோம் 2-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால் மேரிகோம் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. ஆசிய குத்துச்சண்டையில் ேமரிகோம் வசப்படுத்திய 7-வது பதக்கம் (5 தங்கம், 2 வெள்ளி) இதுவாகும்.

64 கிலோ பிரிவில் இந்தியாவின் லால்பாட்சாய்ஷி 2-3 என்ற கணக்கில் மிலனா சப்ரோனோவாவிடம் (கஜகஸ்தான்) தோற்று வெள்ளிப்பதக்கத்தை பெற்றார். தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.7 லட்சமும், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியவர்களுக்கு ரூ.3½ லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது.

Similar News