செய்திகள்
வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் - சல்மான் பட்

வாசிம் அக்ரம், வக்கார் யூனிசுக்கு  இணையான பவுலர் இந்திய அணியில் இருக்கிறார் - சல்மான் பட் புகழாரம்

Published On 2021-05-28 12:15 IST   |   Update On 2021-05-28 12:15:00 IST
ஐபிஎல் போட்டியில் ரி‌ஷப் பண்ட் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் புகழாரம் சூட்டியுள்ளார்.

கராச்சி:

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட். அவர் சமீபத்தில் நியூசிலாந்து வீரர் வில்லியம்சனை விட விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று கருத்து தெரிவித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வாகனுக்கு பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில் இந்திய வேகப்பந்து வீரர் பும்ராவை சல்மான் பட் பாராட்டியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் ஆகியோருக்கு இணையானவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக சல்மான் பட் கூறியதாவது:-

டொயோட்டோ, கொரோலா கார்கள்போல பும்ரா இல்லை. அவர் உயர் ரக கார்களான லாம்போர்கினி, பெராரி காரை போன்றவர். அவர் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவமான பவுலர் ஆவார். அவரின் திறனை வீணடிக்காமல் சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும்.

முக்கியமான போட்டிகளில் பும்ராவின் பங்கு அவசியமானதாக இருக்கும். அவர் நெருக்கடி நேரத்தில் தன்னை ஏற்கெனவே நிரூபித்திருக்கிறார். அவர் இந்திய அணியின் பொக்கி‌ஷமாகும்.


ரோகித் சர்மா அவரை சரியான விதத்தில் பயன்படுத்துகிறார். பும்ராவுக்கு முதலில் சில ஓவர்கள் கொடுத்துவிட்டு, பின்பு இறுதியில் மீண்டும் பந்துவீச அழைக்கிறார். இது ஒரு நல்ல அணுகுமுறை. ஏனென்றால் இறுதி ஓவர்களில் பும்ராவின் பந்துவீச்சில் ரன்களை எடுப்பது அவ்வளவு சாதாரணமானது கிடையாது.

பாகிஸ்தான் அணிக்கு ஒரு காலத்தில் வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் எவ்வளவு முக்கியமானவர்களாக திகழ்ந்தார்களோ அதுபோல அவர்களுக்கு இணையாக தற்போது பும்ரா இந்திய அணிக்காக இருக்கிறார். அவர்களை போன்று யார்க்கர் முதல் அனைத்துவிதமான ஸ்விங் பந்துகளை வீசக் கூடிய திறமை மிக்கவர் பும்ரா.

ஐ.பி.எல். போட்டியில் ரி‌ஷப் பண்ட் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டார். எதிர்கால இந்திய அணிக்கு அவர் கேப்டனாக இருப்பார்.

விராட் கோலி தற்போது இளமையாக இருக்கிறார். இன்னும் 8 முதல் 9 ஆண்டுகள் வரை அவர் கேப்டனாக செயல்படுவார். இதேபோல ரோகித் சர்மா, ரகானே ஆகியோரும் கேப்டன் பதவியில் திறமையை வெளிப்படுத்தி இருந்தனர்.

இவ்வாறு சல்மான் பட் கூறியுள்ளார்.

Similar News