செய்திகள்
கோப்புப்படம்

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று : ஜெர்மனி அணி 2-வது வெற்றி

Published On 2021-03-29 18:50 GMT   |   Update On 2021-03-29 18:50 GMT
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2022) நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் கத்தாரில் நடக்கிறது.
புசாரெஸ்ட்:

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2022) நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் கத்தாரில் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஐரோப்பிய மண்டல தகுதி சுற்று போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 55 அணிகள் 10 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும். 2-வது இடம் பிடிக்கும் 3 சிறந்த அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்று முடிவுகள் மூலம் தகுதி காணும்.

இந்த தகுதி சுற்றில் ‘ஜெ’ பிரிவில் இடம் பிடித்துள்ள 4 முறை சாம்பியனான ஜெர்மனி அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் ருமேனியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் ருமேனியாவில் உள்ள புசாரெஸ்ட் நகரில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ருமேனியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை தனதாக்கியது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் அர்மேனியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை சாய்த்து 2-வது வெற்றியை சொந்தமாக்கியது.

‘டி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை தோற்கடித்து முதலாவது வெற்றியை ருசித்தது. பிரான்ஸ் அணி முதலாவது ஆட்டத்தில் உக்ரைனுடன் ‘டிரா’ கண்டு இருந்தது.
Tags:    

Similar News