செய்திகள்
பனேசர்

அகமதாபாத்தில் அதே மாதிரி ஆடுகளம் தயார் செய்யப்பட்டால், இந்தியாவுக்கு புள்ளிகள் வழங்கக்கூடாது: பனேசர்

Published On 2021-03-01 16:00 IST   |   Update On 2021-03-01 16:00:00 IST
அகமதாபாத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் ஆடுகளம் முதல் நாளில் இருந்து டர்ன் ஆகியது, அதுபோல் ஆடுகளத்தை 4-வது போட்டிக்கு வைக்கக்கூடாது என இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அதன்பின் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது ஆடுகளம் முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.

அகமதாபாத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியிலும் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. பந்து ஸ்கொயராக டர்ன் ஆனது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. போட்டி இரண்டு நாட்களிலேயே முடிவடைந்ததால் அகமதாபாத் ஆடுகளம் குறித்து விமர்சனம் தொடர்ந்து எழுந்து வருகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பனேசர், 3-வது போட்டிக்கான ஆடுகளம் போன்று 4-வது போட்டிக்கும் அமைக்கப்பட்டால், ஐசிசி இந்திய அணிக்கு புள்ளிகள் வழங்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பனேசர் கூறுகையில் ‘‘அடுத்த போட்டிக்கான ஆடுகளமும் அப்படியே அமைக்கப்பட்டால், அதன்பின் ஐசிசி புள்ளிகளை வழங்கக் கூடாது. உலகின் மிகப்பெரிய மைதானத்தில் தற்போது போட்டி நடைபெறுவதால் ஒவ்வொருவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

குறைந்த பட்சம் ஆடுகளம் பராமரிப்பாளர் சிறந்த ஆடுகளத்தை தயார் செய்ய வேண்டும். டர்னிங் பிட்ச் ஆக இருந்தாலும் கூட சென்னை ஆடுகளம் குறித்து விமர்சனம் செய்தனர். அதைவிட 3-வது போட்டிக்கான ஆடுகளம் மோசம். டர்னிங் பிட்ச் தயார் செய்தாலும் போட்டி 3 அல்லது மூன்றரை நாட்களாகவது செல்ல வேண்டும். இந்தியா அதுபோன்று ஆடுகளம் தயார் செய்யும்போது, போட்டி மூன்று நாட்களுக்காவது செல்ல வேண்டும்’’  என்றார்.

Similar News