செய்திகள்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்- முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 578 ரன்கள் குவிப்பு
சென்னையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்கள் குவித்துள்ளது.
சென்னை:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன் எடுத்திருந்தது.
கேப்டன் ஜோரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 100-வது டெஸ்டில் ஆடிய அவர் தனது 20-வது சதத்தை பதிவு செய்தார். 2ம் நாளான நேற்று தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஜோ ரூட் இரட்டைச் சதம் கடந்து அசத்தினார். பென் ஸ்டோக்ஸ் 82 ரன்கள் குவித்தார். ஓலி போப் 34 ரன், ஜோஸ் பட்லர் 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 555 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கியது. களத்தில் இருந்த டாம் பெஸ் 34 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய ஆண்டர்சன் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் கிளீன் போல்டானார். இதனால் இங்கிலாந்து அணி 578 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி தரப்பில் அஸ்வின், பும்ரா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இஷாந்த் சர்மா, ஷாபாஸ் நதீம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.