செய்திகள்
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் மேத்யூஸ் சதம்: இலங்கை முதல் நாளில் 229/4
மேத்யூஸ் சதம் அடிக்கவும், சண்டிமால் அரைசதம் அடிக்கவும் காலே டெஸ்ட் போட்டியில் இலங்கை முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலே மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
லஹிரி திரிமானே, குசால் பேரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். குசால் பெரேரா 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஒஷாடா பெர்னாண்டோ ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். இந்த இரண்டு விக்கெட்டையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீழ்த்தினார்.
3-வது விக்கெட்டுக்கு திரிமானே உடன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தது. திரிமானே 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து கேப்டன் தினேஷ் சண்டிமால் களம் இறங்கினார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது. மேத்யூஸ், சண்டிமால் இருவரும் அரைசதம் அடித்தனர். சண்டிமால் 52 ரன்னில் வெளியேறினார். அப்போது இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்திருந்தது.
5-வது விக்கெட்டுக்கு மேத்யூஸ் உடன் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா ஜோடி சேர்ந்தார். மேத்யூஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இந்த ஜோடி இன்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.
இலங்கை அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. மேத்யூஸ் 107 ரன்களுடனும், டிக்வெல்லா 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறப்பாக பந்து வீசி 19 ஓவரில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.