செய்திகள்
வாஷிங்டன் சுந்தர்

சென்னை திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு உற்சாக வரவேற்பு

Published On 2021-01-22 06:39 GMT   |   Update On 2021-01-22 10:43 GMT
ஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த ஊர் திரும்பிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை:

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 4 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்டில் தமிழக வீரர்கள் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அறிமுகமானார்கள்.

இதில் இருவரும் சிறப்பாக செயல்பட்டனர். முதல் இன்னிங்சில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். அதேபோல் பேட்டிங்கில் வாஷிங்டன் சுந்தர் 62 ரன் சேர்த்தார்.

அந்த டெஸ்டில் 328 ரன் இலக்கை நோக்கி இந்தியா விளையாடிய கடைசி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் பதற்றமின்றி 29 பந்தில் 22 ரன் எடுத்தார். அப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்று வரலாறு படைத்தது.

இதையடுத்து இந்திய வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்தன. இதற்கிடையே ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நடராஜன் சொந்த ஊரான சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டிக்கு நேற்று மாலை சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். வீட்டுக்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளம் முழுங்க குடும்பத்தினர் நண்பர்கள் வரவேற்றனர்.

வாஷிங்டன் சுந்தருக்கு ஆரத்தி எடுத்தனர். ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் சிறப்பாக விளையாடிய அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

அதேபோல் மற்றொரு தமிழக வீரரான முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சென்னை திரும்பினார். அப்போது நிருபர்களிடம் கூறும்போது, ‘10 ஆண்டுகளில் உலக கோப்பை, சாம்பியன் கோப்பை ஆகியவற்றை பெற்று இருக்கிறோம்.

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது உலக கோப்பை, சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றதற்கு இணையானது. முதல் டெஸ்டில் 36 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனபோது கேலி, கிண்டல் செய்தார்கள். அதன்பின் முக்கிய வீரரான கோலி நாடு திரும்பியது, வீரர்கள் காயத்தால் வெளியேறியது போன்ற சூழ்நிலையில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது மிகவும் சிறப்பானது’ என்றார்.

Tags:    

Similar News