செய்திகள்
வில்லியம்சன்

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் வில்லியம்சன் மீண்டும் சதம் - நியூசிலாந்து அணி 286/3

Published On 2021-01-04 06:58 GMT   |   Update On 2021-01-04 06:58 GMT
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்தது.

கிறிஸ்ட்சர்ச்:

நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 297 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. அசார் அலி 93 ரன்னும், கேப்டன் ரிஸ்வான் 61 ரன்னும் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 5 விக்கெட்டும், சவுத்தி, போல்ட் தலா 2 விக்கெட்டும், ஹென்றி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து முதல் இன்னிங்சை ஆடியது. 71 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து அந்த அணி திணறியது.

புளுன்டெல் 14 ரன்னில் அஸ்ரப் பந்திலும், டாம் லாதம் 33 ரன்னில் ‌ஷகீன்ஷா பந்திலும், டெய்லர் 12 ரன்னில் அப்பாஸ் பந்திலும் அவுட் ஆனார்கள்.

4-வது விக்கெட்டான கேப்டன் வில்லியம்சன்-நிக்கோலஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். இதனால் அந்த அணியின் ரன் மளமளவென உயர்ந்தது.

வில்லியம்சன் மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 140 பந்துகளில் 15 பவுண்டரியுடன், அவர் 100 ரன்னை தொட்டார். முதல் டெஸ்டிலும் வில்லியம்சன் சதம் அடித்து இருந்தார். 83-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 24-வது சதமாகும்.

இதேபோல மறுமுனையில் இருந்த நிக்கோலஸ் அரை சதத்தைத் தொட்டார்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்திருந்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி, அபாஸ், அஸ்ரப் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Tags:    

Similar News