செய்திகள்
சுப்மான் கில்

ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக மாறுகிறது- சுப்மான் கில்

Published On 2020-12-28 03:56 IST   |   Update On 2020-12-28 04:00:00 IST
ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக மாறுகிறது என்று இந்திய அறிமுக வீரர் சுப்மான் கில் கூறியுள்ளார்.

2-வது நாள் ஆட்டம் முடிந்த பிறகு இந்திய அறிமுக வீரர் சுப்மான் கில்நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்திய கேப்டன் ரஹானேவின் இன்னிங்ஸ் பற்றி சொல்வது என்றால், அது பொறுமையை சார்ந்த விஷயம். அவர் பொறுமையாக செயல்பட்டார். இது போன்ற தரமான பந்து வீச்சு தாக்குதலை எதிர்கொள்ளும் போது அது தான் அவசியம். ரஹானே விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. முதல் நாளில் அஸ்வின், ஜடேஜாவின் பந்து வீச்சு ஓரளவு சுழன்று திரும்பியது. 2-வது நாளில் நாதன் லயன் வீசிய பந்துகளும் சற்று சுழன்றதை பார்க்க முடிந்தது. நிச்சயம் ஆடுகளத்தில் மேலும் வெடிப்புகள் உருவாகும். அதன் பிறகு ரன் எடுப்பது பேட்ஸ்மேன்களுக்கு இன்னும் சவாலாகி விடும். எனவே தற்போதைய ஸ்கோர் முன்னிலையை நாங்கள் சரியாக பயன்படுத்தி முன்னெடுத்து செல்ல வேண்டும். அதன் பிறகு 2-வது இன்னிங்சில் முடிந்தவரை விரைவில் ஆஸ்திரேலியாவை ஆல்-அவுட் ஆக்க வேண்டும்’ என்றார்.

ரிஷாப் பண்டின் விக்கெட்டை வீழ்த்தி டெஸ்டில் தனது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கையை 250-ஆக உயர்த்திய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கூறுகையில், ‘பந்து மிருதுவானதும் ஆடுகளத்தில் எந்த சலனமும் இல்லாததை நாங்கள் உணர்ந்தோம். அதனால் பேட்டிங்குக்கு சாதகமாக மாறிவிட்டது. எனவே நாங்கள் மீண்டும் பேட் செய்யும் போது மிகப்பெரிய ஸ்கோர் குவிக்க வேண்டியது முக்கியம். ரஹானேவின் பேட்டிங் உண்மையிலேயே சிறப்பாக இருந்தது. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார். சதத்திற்கு முன்பாக அவரை 3-4 தடவை நாங்கள் அவுட் செய்திருக்கலாம். வாய்ப்புகளை தவற விட்டு விட்டோம்’ என்றார்.

Similar News