செய்திகள்
ரஹானே

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 277/5 - ரஹானே சதம்

Published On 2020-12-27 07:50 GMT   |   Update On 2020-12-27 09:51 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் எடுத்துள்ளது.

மெல்போர்ன்:

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது. லபுஷேன் அதிகபட்சமாக 48 ரன் எடுத்தார்.பும்ரா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 36 ரன் எடுத்து இருந்தது. சுப்மன் கில் 28 ரன்னும், புஜாரா 7 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. 159 ரன்கள் பின்தங்கிய நிலை, கைவசம் 9 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடியது.

2-வது விக்கெட் ஜோடி இணைந்து நிதானமாக ஆடி 50 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிக்கொண்டு இருந்த சுப்மன்கில் 45 ரன்னில் கம்மின்ஸ் பந்தில் அவுட் ஆனார். அவர் 8 பவுண்டரிகள் அடித்தார்.

அப்போது இந்தியாவின் ஸ்கோர் 61 ஆக இருந்தது. சுப்மன்கில் பெவிலியன் திரும்பிய 2-வது ஓவரிலேயே புஜாராவும் ஆட்டம் இழந்தார். அவர் 17 ரன்கள் எடுத்தார். அவரையும் கம்மின்ஸ் தான் அவுட் செய்தார்.

கில், புஜாரா அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. 64 ரன்னில் 3 விக்கெட்டை இழந்தது.

4-வது விக்கெட்டுக்கு கேப்டன் ரஹானே-விகாரி ஜோடி நிதானமாக ஆடியது. மதிய உணவு இடை வேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 90 ரன் எடுத்து இருந்தது. ரஹானே 10 ரன்னுடனும், விகாரி 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

4-வது விக்கெட் ஜோடி நிதானத்துடன் விளையாடியது. 40.4-வது ஓவரில் இந்தியா 100 ரன்னை எடுத்தது. ரஹானேயும், விகாரியும் இணைந்து 126 பந்துகளில் 50 ரன்னை எடுத்தனர்.

ஆஸ்திரேலிய சுழற்பந்து வீரர் நாதன் லயன் இந்த ஜோடியை பிரித்தார். விகாரி 21 ரன்னில் அவரது பந்தில் சுமித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 116 ரன்னாக இருந்தது. 5-வது விக்கெட்டுக்கு ரஹானேயுடன் ரி‌ஷப்பண்ட் ஜோடி சேர்ந்தார்.

ரி‌ஷப்பண்ட் தனது வழக்கமான ஆட்டத்தை பின்பற்றினார். 52.3 ஓவர்களில் இந்தியா 150 ரன்னை தொட்டது.

இந்நிலையில் 3 பவுண்டரிகளை அடித்த ரிஷப்பண்ட் ஸ்டார்க் பந்து வீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து கேப்டன் ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பொறுப்புடன் ஆடிய ரஹானே டெஸ்டில் தனது 12-வது சதத்தை பதிவு செய்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 277 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ரஹானே 104 ரன்களுடனும் ஜடேஜா 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.  

ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், ஸ்டார்க் தலா 2 விக்கெட்டும் லயன் ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தனர்.

Tags:    

Similar News